Sunday, April 3, 2016

26 - மேலும் சில முக்கியக் குழுக்கள்-

எஸ்.எஸ்.ராஜேந்திரன்

இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், அரசியல்வாதி , நாடகக் கலைஞர்..இப்படி பன்முகம் கொண்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

பாய்ஸ் நாடகக் கம்பெனியில், குழந்தை நட்சத்திரமாக சேர்ந்து நடித்தார்.பின்னர், டி.கே.சண்முகம் அவர்களின் பால ஷண்முகானந்தா சபையில் நடிகரானார்.

பின்னாளில், தானே, எஸ்.எஸ்.ஆர்.நாடக மன்றம் என்ற குழுவை ஆரம்பித்து, மணிமகுடம், அல்லி, தங்கரத்தினம் ஆகிய நாடகங்களை நடத்தினார்.

மனோரமா, ஷீலா, விஜயகுமாரி ஆகியோர் இவர் குழுவின் நடிகைகள் ஆவர்.

1952ல், பாரசக்தி, திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்த இவர் 85 படங்களுக்கும் மேல் நடித்தார்.இலட்சியநடிகர் எனவும் மக்களால் போற்றப்பட்டார்.

தமிழ் வசன உச்சரிப்பு இவரதி சிறப்பு அம்சமாகும்

தில்லை ராஜன் -

தில்லை ராஜன் ..LIC யில் பணி புரிந்து வந்தார்.திரைத்துறையிலும் அநேக நண்பர்களைப் பெற்றிருந்த அவர், நாடகமந்திர் என்ற குழுவை ஆரம்பித்து நாடகங்களை நடத்த ஆரம்பித்தார். நகைச்சுவை நடிகர்கள் சுருளி ராஜன், ஓமகுச்சி நரசிம்மன் ஆகியோர் இவரது நாடகங்களில் இவருடன் நடித்தனர்.

சுருளி நடித்த "சக்கைப் போடு போடு ராஜா" பரவலாக அந்த நாளில் பேசப்பட்ட நாடகம் ஆகும்.பின்னர், "நாரதரும் நான்கு திருடர்களும்" என்ற நாடகத்தில் ஓமகுச்சி என்ற பாத்திரத்தில் நடித்ததால் நரசிம்மன் , ஓமகுச்சி நரசிம்மன் ஆனார்.

தில்லைராஜனுக்கு, கஜேந்திர குமார், கிரேசி மோகன் மற்றும் ராது ஆகியோர் நாடகம் எழுதித் தந்துள்ளனர்.திரைப்பட நடிகை சிமித்ரா இவரது பெரும்பாலான நாடகங்களில் பங்கேற்றார்.
திரைப்பட இயக்குநர் ஷங்கர் இவரது நாடகக் குழுவில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நீ நாளை நான், பாவ மன்னிப்பு, பணம் பின் பாசம் ஆகிய நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

பல திரைப்படங்களில் தில்லை ராஜன் நடித்திருந்தாலும்...தன்னை ஒரு நாடக நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே விரும்பியவர்.

வி.கோபாலகிருஷ்ணன்;_

தமிழ் நாடக மேடைமட்டுமல்ல...சென்னையில் ஆங்கில நாடகங்கள் போடுபவர்களும் மறக்கமுடியா கலைஞர் வி.கோபாலகிருஷ்ணன்.1933ல் பிறந்த இவர் சிறந்த நாடக நடிகர் மட்டுமல்ல...திரைப்படங்களில் சிறந்த குணசித்திர நடிகர் என்ற பெயரையும் பெற்றவர்.நானூறுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் அந்த நாளிலேயே எம்.ஏ., பட்டம் பெற்ற பட்டதாரி.,

சென்னையில் ஒரே நாடகத்தைத் தொடர்ந்து நூறு நாட்கள் மேடையேற்றி சாதனை புரிந்தவர்.

மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற ஆங்கில நாடகங்களை அரங்கேற்றும் குழுவில் பங்கேற்றவர்.
எஸ்,வி.ஸகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜில், போலீஸ்காரன் மகள், பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் நாடகங்களில் பங்கேற்றவர்.

இவர் பின்னர் கோபி தியேட்டர்ஸ் என்ற குழுவை ஆரம்பித்து நாடகங்களை நடத்தினார்."ராஜயோகம், யாரோ இவர் யாரோ ஆகிய நாடகங்கள் வெற்றி நாடகங்கள்.

இவரது குழுவில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் எம்.ஆர்.கே., என்று அழைக்கப்பட்ட எம்.ஆர்.கிருஷ்ணசாமி ஆவார்.

எஸ்.வி.சேகரை, நாடக உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வி.கோபாலகிருஷ்ணன் ஆவார்

வி.எஸ்.ராகவன்

சிறந்த திரைப்பட குணசித்திர நடிகரான இவர்  ஐ என் ஏ தியேட்டர்ஸ் என்ற குழு நடத்தி வந்தார்.குருகுல பாணி.அவ்வளவு ஒழுக்கத்தைக் கடைப் பிடிப்பவர்.கண்டிப்பானவர்.இவரது குழு ஸ்ரீரங்கம் நரசிம்மனின் பிரபல நாவலான "நகையே உனக்கொரு நமஸ்காரம்" நாவலை நாடகமாக்கி நடித்தனர்.
பின்னர், ஒன் செட் பிளே என்று சொல்லப்படும் ஒரே செட்...அதுவும் பிரம்மாண்டமாய்...போட்டு சதுரங்கம் நாடகம் நடத்தினர்.இதில் ஸ்ரீகாந்த் நடித்தார். கே.கே.ராமனின் ஞானயோகம் நாடகம் மிகவும் பேசப்பட்ட நாடகம்.

திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்த போதிலும் நாடகங்களை மறக்காத கலைஞன் இவர்

டி.எஸ்.சேஷாத்ரி

1960-70 களில் மிகவும் பிரபல நாடக நடிகர்.இவரது சாந்தி நிகேதன் குழுவினருக்காக மாரா, பிலஹரி,தூயவன்,சௌந்தர்யன் ஆகியோர் நாடகங்கள் எழுதியுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன், புஷ்பலதா, டைபிஸ்ட் கோபு ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்துள்ளனர்.

பிலஹரி எழுதிய, "நெஞ்சே நீ வாழ்க" என்ற நாடகம் . பின்னர் மேஜர் சுந்தரராஜன் நடிப்பில், ஆலயம் என்ற பெயரில் திரைப்படமாக வந்து தேசிய விருது பெற்றது.

பால்குடம், கற்பூரம், மகிழம்பூ ஆகியவை இவரால் மேடையேற்றப்பட்ட சில நாடகங்கள்.திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர், இவரை தனது வெண்ணிற ஆடை படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகம் செய்வித்தார்.இவரது சகோதரன் டி.எஸ்.பத்மனாபனும் ஒரு நாடக நடிகர்.இவரும் ஒரு தனி நாடகக் குழு நடத்தி வந்தார்.அதில் ராஜசேகர், பானுமதி ஆகியோர் முக்கிய நடிகர்களாக இருந்தனர்.


பாரதி மணி
-----------------------

80 வயது இளையவரான இவருக்கு 71 வருட நாடக அனுபவம்.தமிழகத்தின் மூத்த எழுத்தாளர்களின் எழுத்துகள் பலவற்றை நாடகமாக்கியுள்ளார்.7வயதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகங்களில் நடித்தவர்.பள்ளிப்படிப்பு முடியும் வரை விடுமுறைகளில் அவர் நாடகங்களில் நடித்தார்.பின் 1956ல் த்ட்சிண பாரத் நாடக சபா ஆரம்பித்து பம்மல் சம்பந்தமுதலியாரின் "சபாபதி" நாடகத்தை அரங்கேற்றினார்.1962ல் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாஸில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் அறிவியல் ரீதியாக நாடகங்களை அணுகும் முறையினைக் கற்றார்.இதுவரை கிட்டத்தட்ட 2000 க்கும் மேற்பட்ட நாடக மேடைகளில் நடித்துள்ளார்.இந்திரா பார்த்தசாரதியின் "மழை" போர்வை போர்த்திய உடல்கள்" ஆகிய நாடகங்களும், சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகமும் இவரது நாடகங்களில் புகழ்பெற்றவை எனலாம்

ஹெரான் ராமசாமி

மனோகருடன் அவரது நேஷனல் தியேட்டர்ஸின்சரித்திர நாடகங்களில் நடித்து வந்த ஹெரான்..பின் தனிக்குழு ஆரம்பித்து சனீஸ்வரன் போன்ற நாடகங்களை நடத்தினார்.இவரைப்போல ருத்ராபதி என்ற நடிகரும் சில சரித்திர நாடகங்களை நடத்தினார்.

நவரசா பாலா

பாண்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலசந்திரன், நாடக ஆர்வம் உள்ளவராய் இருந்தார்.விசுவின் முதல் நாடகமான "உறவுக்குக் கை கொடுப்போம்"  நாடகத்தில் முக்கியப் பங்கேற்று நடித்தார்.

பின்னர் நவரசா என்ற சபாவையும், நாடகக் குழுவையும் ஆரம்பித்து பல வெற்றி நாடகங்களை அரங்கேற்றினார்.பாண்ட்ஸ் பாலா என்றும், நவரசா பாலா என்றும் அறியப்பட்ட இவர் ஸ்ரீகவி எழுத "எந்தரோ மகானுபாவலு" நாடகம் மாபெரும் வெற்றி நாடகம்.ராஜ சேகர் இதில் நடித்தார்.

பின்னர் விழுதுகள் என்ற நீண்ட தொலைக்காட்சித் தொடர் பாலாவின் முழுத்திறமையை வெளிப்படுத்தியது எனலாம்

லியோ பிரபு

நாடகத்துறையில் புகழ் பெற்று விளங்கியவர்.ஒய்.ஜி.பி.குழுவில் நடித்து வந்தார்.டி.எஸ்.சேஷாத்ரியின் சத்திய சோதனை இவர் நடித்த நாடகங்களில் சிறப்பான ஒன்று எனலாம்.

1969ல் ஸ்டேஜ் இமேஜ் என்ற சொந்தக் குழுவை ஆரம்பித்து..கிட்டத்தட்ட 30 நாடகங்களை அரங்கேற்றி நடத்தினார்.இவரது நாடகங்களுக்கான கதை, இயக்கம் இவரே!

இவரது நாடகங்கள் சில, "நீரில் எரியும் தீபம்", கங்கையுண்டு வெள்ளம் இல்லை< பதவி இழந்த ராஜா ஆகியவை

நெருப்புகோலங்கள் என்ற நாடகத்தை, தனது பரதநாட்டியம் அறிந்த மகள் முருகஷங்கரிக்காக எழுதி அவரை நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அரங்கன் அரங்கம்

1955ஆம் ஆண்டு தனது 11ஆவது வயதில், தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்தவர் எஸ்.ரங்கநாதன் என்னும் ரங்கமணி.

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் மகனாக முதல் தேதி என்ற படத்தில் நடித்தார்.பின், கோமதியின் காதலன், செந்தாமரை ஆகிய படங்களில் நடித்தவர், நாடகத்தின் மேல் இருந்த ஆரவத்தால் 1980ல் நாடகத்துறைக்கு வந்தார்,

இதுவரை 17 நாடகங்களை தனது அரங்கன் அரங்கம்  குழுவிற்கும், காத்தாடி, பிந்து ஸ்டேஜ், தில்லை ராஜன் ஆகியோருக்கும் எழுதியுள்ளார்.

வாழ்க்கை விசித்திரமானது,2பிஎச்கே, போலீஸ் அகடெமி, போன்றவை இவரது நாடகங்களில் சில

அகஸ்டோ
-----------------------

புருஷோத்தமன் என்பவர் தான் பிறந்த ஆகஸ்ட் மாதத்தை, அகஸ்டோ என தனது புனைப் பெயர் ஆக்கிக் கொண்டு, அகஸ்டோ கிரியேஷன்ஸ் என்ற நாடக் குழுவை 1980 ஆம் ஆண்டு துவக்கினார்.

இருட்டல்ல நிழல், எந்தப் புத்தில் எந்த பாம்போ, அந்த சரவணனைச் சுற்றி, ஜெயில் வீடு, ஜெயித்த குதிரை, ஜெ.ஆள்வார் எலும்புக்கூடு ஆகிய நாடகங்கள் இவர் குழுவிற்காக எழுதி மேடையேறியவை.

தவிர்த்து, காத்தாடி ராமமூர்த்தி, அமிர்தம் கோபல், பவித்ராலயா ஆகிய குழுவினருக்கும் நாடகங்களை எழுதித் த்ந்துள்ளார்.

இவரது நாடகங்கள் வழக்கமான நாடகப் பாணியிலிருந்து மாறுபட்டவை. மர்ம நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள் இவர் சிறப்பு.

எஸ்.கே.ஜெயகுமார்,கீதாஞ்சலி ராஜா, பொன்மலை சுந்தர் ஆகியோர் இவர் நாடகங்கள் மூலம் வெளிவந்தவர்கள் எனலாம்.

அமிர்தம் கோபால்
-------------------------------------

தனது கீதாஞ்சலி குழு மூலமாக இதுவரை 43 நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.ஒரே குழு, இவ்வளவு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது ஒரு சாதனை எனலாம்.இவருக்கான நாடகங்களை வெங்கட், ராது, அகஸ்டோ. சுந்தர், டி.வி.ராதாகிருஷ்ணன்,,ஸ்ரீவத்சன் போன்றவர்கள் எழுதியுள்ளனர்


பிரயத்னா ஸ்டேஜ்
-----------------------------------------



கே. விவேக் ஷங்கர் என்னும் திறமைமிக்க இளைஞர் 2000ஆம் ஆண்டு பிரயத்னா என்ற பெயரில் ஒரு நாடக குழுவினை திரு. வி. கோபாலகிருஷ்ணன் அவர்களது நினைவு நாளன்று (29/04/2000) ஆரம்பித்தார்.தனக்கென ஒரு தனிப்பாணியுடன் நாடகங்கள் எழுத ஆரம்பித்து அதே நாட்களில் அரங்கேற்றம் செய்தார். 

நரேந்திரா, ID, நதிமூலம்,  ஆகிய நாடகங்களை அரங்கேற்றினார்.பிரபல தொலைக்காட்சி நடிகர்கள்  அஃப்சர்,கௌசிக், கிரீஷ் போன்றோர் இவரது மேடை மூலம் நாடக நடிகர்கள் ஆனார்கள்.

மற்றொரு திறமை மிக்க நடிகரான திரு TDS என அழைக்கப்பட்ட சுந்தரராஜனை தனது நாடகங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். திரு காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் குழுவிற்கு இரண்டு நகைச்சுவை நாடகங்கள் எழுதி இயக்கியதோடு அவரை தனது நாடகங்களில் பங்கு பெறச் செய்திருக்கிறார்.

இவர் 2014ல் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு ஸ்தாபனத்தின் அழைப்பின் பேரில் இரண்டு நகைச்சுவை நாடகங்களை சிட்னி நகரில் புதிதாக அரங்கேற்றினார்.

தவிர்த்து விவேக் ஷங்கர் ஸ்ரத்தா குழுவினரின் முதல் தயாரிப்பான ”தனுஷ்கோடி”  என்ற நாடகத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்நாடகத்தில் மழைக்காட்சிகளை தத்ரூபமாக அமைத்தார்.லாரிகளில் தண்ணீர் கொணர்ந்து, மேடையின் பின்புறம் நிறுத்தி..சுழற்சி முறையைப் பயன்படுத்தி...மேடையில் தொடர்ந்து 90 நிமிடங்களுக்கும் மேலாக  மழையைக் காட்டினார்.

இது ஒரு சாதனையாகும்


டம்மீஸ்
----------------

ஸ்ரீவத்சன், ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கிய இக்குழு..வித்தியாசமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். இவர்களது விநோதயசித்தம், பரீட்சை, பிரதிபிம்பம், எங்கிருந்தோ வந்தான்,வாயு ஆகிய நாடகங்கள் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டவை எனலாம்.இந்த இருவருடன், கிரிதரின் பங்கும் சொல்லப்பட வேண்டிய ஒன்று எனலாம்

சுபா கிரியேஷன்ஸ்
------------------------------------

பாம்பே கண்ணனின் குழு.சில ஆண்டுகள் முன்பு வரை நாடகங்களை அரங்கேற்றியவர் இப்போது ஆடியோ புக் என்று..பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல் புறா, பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகள் ஆகியவற்றை டிவிடி வடிவில் தயாரித்து அளித்து வருகிறார்,இப்போது ரா கி ரங்கராஜனின் கிருஷ்ணதேவராயர் தயாராகி வருகிறது.

நவ்ரங் தியேட்டர்ஸ்
----------------------------------------

இந்தப் பெயருடன் திரு விஸ்வனாதன் ஒரு குழுவை நடத்தி வந்தார்.பல பிரபல வெற்றி நாடகங்களை இவர் நடத்தினார்.அவற்றுள் குறிப்பிடத்தக்க நாடகம் ராது எழுதிய "மை டியர் குட்டிப் பிசாசு" என்னும் நாடகம்

தமிழரசன் தியேட்டர்ஸ்
------------------------------------------

                                                           (  பாலசுந்தரம்.)

நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகரின் நாடகக்குழுவின் நடிகராய் இருந்தவர் பாலசுந்தரம்.இவர், மனோகருடன், சாணக்கிய சபதம்,விசுவாமித்திரர்,திருநாவுக்கரசர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.மனோகரின் மறைவிற்குப் பின், தமிழரசன் தியேட்டர்ஸ் என்ற குழுவினை நிறுவி, மனோகர் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்து வருகிறார்.இவரது சரித்திர/புராண நாடகங்கள் சென்னை மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து பெரு நகரங்கள், கோவில்கள் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.

இவரது நாடகங்களில் சில, ஸ்ரீ நரசிம்மர், ராகு-கேது, சூரசம்ஹாரம்,சுவாமி விவேகானந்தர், நரகாசுரன்.

இவருக்கான நாடகங்களை கலைமாமணி ஆறு.அழகப்பன், கலைமாமணி கே.பி.அறிவானந்தம் ஆகியோர் எழுதி வருகின்றனர்.

மேடையில் மட்டுமின்றி, இவர் நாடகங்கள் சென்னை வானொலி, சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பப்பட்டுள்ளன.

திருவாளர்கள் கே.பி.அறிவானந்தம், எம்.ஷண்முகம்,முத்துக்குமார், எல்.மோகன், ரவிக்குமார், திருமதி பரிமளம், திருமதி ஜெயந்தி ஆகியோர் இவர் நாடகங்களில் நடித்து வருகின்றனர்

இவருக்கும், இவர் நாடக நடிகர்களுக்கும், நாடங்களுக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன

கங்கை கலாலயா
-------------------------------

அருணகிரி என்பவர் நடத்தியக் குழு இது.கிள்ளிவளவன் காதல், திருவள்ளுவர் ,மணிபல்லவ மங்கை ஆகிய சரித்திர நாடகங்களை அரங்கேற்றினார்.தவிர்த்து, நாடகங்களுக்காகவே "நாடகப் பணி" என்ற பத்திரிகையையும் சில காலம் நடத்தியது குறிப்பிடத்தக்கது

ஒரிஜினல் பாய்ஸ் 95
------------------------------------------

பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் நடிகர்கள் சிலர் பூர்ணம் விஸ்வநாதனின் ஆசியோடு குருகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 95 ஐ ஆரம்பித்தனர்.இதுவரை 23 நாடகங்களை அரங்கேற்றி நடத்தியுள்ளனர்.

ம.வெ.சிவகுமார்,கௌரிஷங்கர்,எம்.பி.மூர்த்தி ஆகியோரைத் தவிர பிரபல எழுத்தாளர் சுஜாதாவும் இவர்களுக்கான நாடகங்களை எழுதியுள்ளனர்.

பாப்கார்ன் கனவுகள், கனவு இல்லம், அன்னபூரணியின் அடுக்களை,அப்பா வந்தார்.முயல்/வீடு(சுஜாதா எழுதிய இரு நாடகங்கள்), டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு (சுஜாதா), உறவுகளுக்கு அப்பால், நாற்காலிக்குஇடமில்லை, கடவுள் வந்திருந்தார் (சுஜாதா)

விஸ்வநாதன் ரமேஷ், மாலதி சம்பத்,பூர்வஜா மூர்த்தி ஆகியோர் இவர்கள் குழு நடிகர்கள்.

மாதவ பூவராக மூர்த்தி முக்கிய உறுப்பினராய் இக்குழுவை வெற்றியுடன் நடத்திவருகிறார்.

மதர் கிரியேஷன்ஸ்
-------------------------------------

ஜெயகுமாரின் இக்குழு சில ஆண்டுகளாக நாடகங்களை நடத்தி வருகின்றனர்.இவர்களுக்கு திரு சந்திர மோகன் நாடகங்களை எழுதி வருகிறார்.நேத்ர தரிசனம் (மூன்றே மூன்று பாத்திரங்கள்), பிரியமுடன் அப்பா, தலைமுறைகள் இவர்களின் சில நாடகங்கள். மது புருஷோதமன், குமார் ஆகிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்

சத்ய சாய் கிரியேஷன்ஸ்
------------------------------------------------

மாப்பிள்ளை கணேஷ்  என்று நாடக நண்பர்களாலும், இவரது ரசிகர்களாலும் அழைக்கப்படும் கணேஷ் ஆரம்பித்த நாடகக் குழு சத்ய சாய் கிரியேஷன்ஸ்.நகைச்சுவை நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாராட்டுதல்களை பெற்று வரும் இக்குழுவினருக்கு எழிச்சூர் அரவிந்தன் நாடகங்களை எழுதி வருகிறார்.
அடக்கடவுளே! எல்லாம் மாயை,கலக்கற மாப்பிள்ளை இவர்களின் சில நாடகங்கள்.

மகாலக்ஷ்மி மகளிர் குழு
------------------------------------------

பாம்பே ஞானம், முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட ஒரு நாடகக் குழுவை நடத்தி வருகிறார்.இவர்களின், போதேந்திராள், ராமானுஜர் போன்ற நாடகங்கள் புகழ் பெற்றவை.26 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் இக்குழுவில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்

கலாமந்திர்
----------------------

மும்பையில் தன் கலைப்பணியை ஆற்றிக் கொண்டிருந்த சாணக்யா...சென்னைக்கு வந்தார் பம்பாய் சாணக்கியாவாக.திறமையுள்ளவர்கள் இயக்குநர் சிகரம் கண்களில் பட்டால் என்னவாகும்? ஆம்... பம்பாய் சாணக்கியாவும் கேபியின் சிஷ்யர் ஆனார்.தொலைக்காட்சி தொடர்களுக்கு கதை ,வசனம் எழுதினார்.
பின்னர்...கலாமந்திர் என்ற நாடகக் குழுவினை ஆரம்பித்து, நெருடும் உறவுகள், மூன்றாவது கை, டீ.ஆர்..பி. ஆகிய நாடகங்களை வழங்கினார்.
காட்சியமைப்பு, ஒளி அமைப்பு என்ற பிரிவுகளில் பல மாற்றங்களைச் செய்து, தன் திறமையை நிரூபித்து வருகிறார்.,

ரெயில் பிரியா
-----------------------

ரெயில்வேயில் வேலை செய்து வரும் நண்பர்கள் அனந்து, ரவிச்சந்திரன், வெங்கட் ஆகியோர் இணைந்து இக்குழுவை நடத்தி வருகின்றனர்.இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் இக்குழுவின் நாடகங்கள் அனைத்தும் நகைச்சுவை நாடகங்களே!
இவர்களின் ஒரே நாடகம், ஒரே நேரம் இரு நாட்களில் இருமேடைகளில் நடந்துள்ளது.தவிர்த்து, 27மணி நேரம் 12 நாடகங்கள் தொடர்ந்து ஒரே மேடையில் நடத்தி சாதனை புரிந்துள்ளனர்

இவர்களைத் தவிர, இன்று...ரயில் பிரியா(அனந்து),கலாவாஹினி (வி.எச்.பாலு),கே.ஆர்.எஸ்.குமாரின் நாடகக் கலைக் கூடம் (புராண நாடகங்கள்),முத்துகுமாரின் மயூரப்பிரியா< மல்லிக்ராஜின் அஜய் எண்டெர்பிரைசஸ்,ஃபேப் தியேட்டர்ஸ் (ஃபாத்திமா பாபு) ஆகிய குழுக்கள் நாடகங்கள் நடத்தி வருகின்றனர்.

பூவை மணி-

இவரின் பல நாடகங்கள் 80களில் வந்தன.குறிப்பாக கற்பூர பொம்மை, ஒரு பொம்மலாட்டம் நடக்குது,ஆகிய நாடகங்களைச் சொல்லலாம்

சென்னை டிராமா ஹவுஸ்
-----------------------------------------------

சென்னை டிராமா ஹவுஸ் என்ற பெயரில், விவேக் ராஜகோபால்,விகரம் மங்கல், கௌசிக் ரமேஷ், கார்த்திக் பட் ஆகிய இளைஞர்கள் சமீபத்தில் ஒரு குழுவினை ஆரம்பித்து நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

கண்டபடி கண்டுபிடி, இன்று போய் நேற்று வா, குறுக்குவழியில் டிராஃபிக் ஜேம், கல்யாண வேளையில் கரடி ஆகிய நாடகங்கள் இதுவரை அரங்கேறியுள்ளன.புதுமையான தலைப்புகளில் வந்த இவை அனைத்துமே நகைச்சுவை நாடகங்கள்

இயக்குநர் சிகரம் கேபியுடன் இணைந்து :இடியுடன் கூடிய அன்பு மழை:" என்ற நாடகத்தையும் விவேக் ராஜகோபால் நடத்தியுள்ளார்.இந்நாடகத்திற்கு இலக்கியச் சிந்த்னை விருது கிடைத்துள்ளது.


தவிர்த்து சமீப காலமாக இளைஞர்கள் தமிழ் நாடக மேடையில் வந்து கொண்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும்


ராது அவர்கள் பேரன் அம்பரிஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு குழுவினைத் தொடங்கி , தற்போது சுஜாதாவின் "கடவுள் வந்திருந்தார்" நாடகம் நடத்தி வருகிறார்

ஒய்.ஜி.மதுவந்தி...மகம் எண்டெர்பிரைசஸ் என்ற குழு ஆரம்பித்து தொலைக்காட்சி நடிகர் சுந்தரேஷ்வரனுடன் பெருமாளே  என்ர நாடகம் நடத்தி வருகிறார்

சதிஷ் கிருஷ்ணமூர்த்தி, லீகலி யுவர்ஸ் என்ற குழு நடத்தி வருகிறார்..

கே ஆர் எஸ் குமார் என்பவர் சரித்திர நாடகங்கள் நடத்தி வருகிறார்

மல்லிக் ராஜ் என்பவர் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு ஆகிய நாடகங்களை வெற்ற்கரமாக மேடையேற்றி வந்துள்ளார்.

மேஜிக் லான்டெர்ன் குழுவினர் பின்னியின் செல்வன் நாடகத்தை மேடையேற்றினர்.ஆடுதுறையைச் சேர்ந்த ஒரு குழுவினரும் இந்நாடகத்தை அரங்கேற்றினர்

இப்படிப்பட்ட குழுக்களைப் பார்க்கையில், இவர்கள் எல்லாம்
தமிழ் நாடக உலகிற்கு அழிவில்லை என்பதை நிரூபித்து வருவதாகவேத் தோன்றுகிறது

No comments:

Post a Comment